சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது, "ஒரு நீதிபதியின் தலைமையில் மழைநீர் வடிகால் பணிகள் செய்தார்களா இல்லையா என தணிக்கை செய்தாலே தெரிந்துவிடும் பணி நடைபெற்றதா, இல்லையா என்று. இதில் விவாதிக்க ஒன்றும் இல்லை. கே.என் நேரு கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு 98 சதவீத பணிகள் முடிந்ததாகக் கூறினார். ஆனால் தற்போது அவர் வெளியிட்ட அறிவிப்பில் 42 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.
பணிகளை முழுமையாக செய்துள்ளதாக மக்களிடம் சொல்ல விரும்பினால் உச்ச நீதிமன்றத்தின் முன்னிலையிலோ அல்லது உயர் நீதிமன்றத்தின் முன்னிலையிலோ இதை ஆடிட் செய்ய வேண்டும். இன்று(டிச.10) முதலமைச்சர் அறிவித்துள்ள நிவாரணத் தொகை மத்திய அரசின் நிதியிலிருந்து(STRF) அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதலமைச்சர் அறிவித்தது ஒன்றும் பிரமாதம் இல்லை. மழை பெய்து 7 நாட்கள் ஆகியும் இன்னும் சில பகுதிகளில் பாதிப்பு குறையவில்லை. பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அதனால் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். அதேப்போல் சேதமடைந்த பகுதிகளையும் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.