சென்னை: வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (டிச. 21) உத்தரவிட்டது.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான இந்த தீர்ப்பு குறித்து அண்ணாமலை பேசியதாவது, "பாஜக இத்தீர்ப்பை வரவேற்கிறது. மிகவும் கால தாமதமாக இருந்தாலும் கூட நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது, நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் தீர்ப்பு. தமிழ்நாடு அரசியலை புரட்டிப் போடும் தீர்ப்பு.
தமிழகத்தில் ஊழல் இல்லாத சமுதாயம் அமைய இது ஒரு படிக்கல்லாக அமையும் என்று நம்புகிறோம். இது ஆரம்பம்தான். இதைப்போல் மற்ற திமுக அமைச்சர்கள் மீது நடந்து கொண்டிருக்கும் வழக்குகளிலும், நீண்ட கால தாமதங்கள் செய்யாமல், விரைவில் தீர்ப்புகள் வழங்க வேண்டும். 2024ஆம் ஆண்டு மத்தியில் இன்னும் நான்கைந்து திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள்.
இந்த தீர்ப்பு பணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுகவுக்கு அனைத்தையும் புரட்டிப்போடும் தீர்ப்பு. அவர் மீது மற்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கிலும் விரைவில் தீர்ப்பு வர வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில், 11 அமைச்சர்கள் மீது, நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளன.