சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் மத்தியில் பாஜக, மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க முயற்சி செய்து வருகிறது. மறுபுறம் பாஜகவை மத்திய ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்து பாஜகவிற்கு எதிராக வியூகம் வகுத்து வருகின்றனர்.
இப்படியாக நாடாளுமன்றத் தேர்தல் களம் அதகளப்படுத்தப்பட்டு வரும் நிலையில்தான், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாது சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பாக செய்தியாளர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கேட்டபோது, தேசிய தலைமைதான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் என பதில் அளித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து பாஜகவின் தலைமை நிர்வாகிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிக்கை அளித்திருந்தார்.
இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு சென்று நேற்று (அக் 02) நேரில் சந்தித்துப் பேசினார். இதனிடையே இன்று (அக்.3) சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், அண்ணாமலை தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.