சென்னை:தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அந்த சட்ட முன்வடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மது பரிமாற சிறப்பு அனுமதி வழங்கும் அரசாணைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த அரசாணையில் ஆட்சேபனைக்குரிய சிலவற்றை மாற்றம் செய்து திருத்தப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு அரசாணையில் திருத்தம் செய்ததை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று(ஏப்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை விநியோகிக்க சிறப்பு அனுமதி அளிக்கும் அரசாணையை, ஒரே நாளில் தி.மு.க., அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதுபோல, 12 மணி நேரம் வேலை சட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போல ஓர் அறிவிப்பை, ஓர் உத்தரவை ஓர் அரசாணையை வெளியிட்டுவிட்டு திரும்பப் பெறுவது ஏற்கனவே நடந்திருக்கிறது. திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது. திருமண மண்டபங்களில், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களுக்கு அனுமதி என்ற முடிவை, தமிழ் கலாசாரத்தை நன்கறிந்த ஒருவரால் நிச்சயமாக எடுத்திருக்கவே முடியாது. ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை அறிந்திராத ஓர் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதற்கு இந்த அரசாணையே சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ் மக்களிடம் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு, திமுக அரசை பணிய வைத்திருக்கிறது.