சென்னை:பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் என்பவர் தனது ட்விட்டரில் தொடர்ச்சியாக மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டுவருவதாக சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கில், அக்டோபர் 16ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கல்யாணராமன் கைதுசெய்யப்பட்டார். இந்நிலையில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அக்டோபர் 23ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் சிறைக்கு கல்யாணராமன் மாற்றப்பட்டார்.
குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்யாணராமன் தாக்கல்செய்த ஆட்கொணர்வு மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவரது மனைவி சாந்தி தாக்கல்செய்துள்ள கூடுதல் மனுவில், "எனது கணவரை காரணமில்லாமல் கடலூர் சிறையில் அடைத்துள்ளனர். அவரது கண்ணில் குறைபாடு உள்ளது. உரிய சிகிச்சை அளிக்கவில்லை.
எனவே அவரை சென்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும். கண்ணிற்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் முன்னிலையாகி, "கல்யாணராமனுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சிறை மாற்றத்திற்கான அவசியம் ஏற்படவில்லை" எனத் தெரிவித்தார். இதையடுத்து, கல்யாணராமனின் மனைவி தாக்கல்செய்த கூடுதல் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:டெல்லிக்கு புறப்பட்ட வீரர்களின் உடல்கள்!