சென்னை அண்ணா சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் பாஜக அறிவுசார் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக தமிழ்நாட்டு தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளர் வி.கே சிங், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர்கள் சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் வி.கே.சிங் பேசியதாவது,”வாரிசு, குடும்பக் கட்சி நமக்கு தேவையில்லை. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, வான்வழி தாக்குதல் நடத்தி பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாமை அழித்தோம். தமிழ் மொழி மிகவும் பழமையானது. அதைக் கற்று கொள்ள ஆசைப்படுகிறேன். இந்திய மக்கள், நாடு மீதும் தற்போதுள்ள மோடி ஆட்சி மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்" என்றார்.
விழாவில் கிஷன் ரெட்டி பேசியதாவது, ”பாஜக தென் தமிழ்நாட்டிற்கு எதிரான கட்சி, மேல் சாதிக்கான கட்சி, இந்துக்களுக்கு மட்டுமான கட்சி என தவறான பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் வரும் தேர்தலில் மக்கள் குடும்பக் கட்சியைப் புறக்கணிப்பார்கள். வலிமையான பிரதமர், இந்தியாவை ஆட்சி செய்து வருகிறார்.
பாஜக மீது கடந்த ஆறரை அண்டுகளில் ஒரு ஊழலும் இல்லை. ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி உட்பட பல ஊழல்கள் நடந்துள்ளன. 370வை நீக்கியதால் தான் 80 விழுக்காடு தீவிரவாத நடவடிக்கைகள் ஜம்மு காஷ்மீரில் குறைந்துள்ளது. அதை நான் பெருமையுடன் சொல்வேன். மோடியின் ஆட்சியில் தான் ஜம்மு காஷ்மீரில் அந்த மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த 70 ஆண்டுகளாகப் பாகிஸ்தான் நம் வீரர்களை கொள்வார்கள், நாம் எதுவும் செய்ய முடியாமல் இருப்போம். ஆனால் மோடி ஆட்சியில் ஒரு இந்திய வீரர் கொல்லப்பட்டால் மூன்று பாகிஸ்தான் வீரர்கள் கொள்ளப்படுவார்கள். ராம ஜென்ம பூமி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நமக்கு ஆதரவான உத்தரவை வழங்கியுள்ளது.
கடந்த காலங்களில், இவ்விவகாரத்தால் பல வன்முறைகள் நடந்துள்ளன. ஆனால் தற்போது எவ்வித வன்முறையும் இல்லாமல் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. கரோனாவால் இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறினார்கள். ஆனால், மோடியின் ஆட்சியால் உலகளவில் பல நாடுகளை விட, நாம் கரோனாவால் குறைவான அளவே பாதிக்கப்பட்டுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: கிரண்பேடி ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தளிக்கப் போகிறாரா 'டாக்டர்' தமிழிசை?