சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர், பிபிஜி சங்கர் (42). பிரபல ரவுடியான இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. வளர்புறம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பாஜகவில் பட்டியலின மாநிலப் பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் சென்னை கொளத்தூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் காரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அவரை கார் மற்றும் பைக்கில் வந்து வழி மறித்த மர்ம கும்பல், காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.
இதில் நிலைகுலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது. இதனால் பயந்துபோன பிபிஜி சங்கர் உடனே காரில் இருந்த கத்தியை எடுத்து, கீழே இறங்கி அந்த கும்பலை மிரட்டிவிட்டு உயிர் தப்பித்து, சாலையின் எதிர் திசையில் ஓடியுள்ளார். அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் சங்கரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்தக் கொலையால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அப்பகுதி மக்கள் சங்கர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து உடனே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நசரத்பேட்டை போலீஸார் ரவுடி சங்கர் உடலை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
ரவுடி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட செய்திகேட்டு, அவரது ஆதரவாளர்கள் சம்பவயிடத்தில் ஒன்று கூடியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இக்கொலை சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த பி.பி.ஜி குமரனை கடந்த 2012ஆம் ஆண்டு இதே போல் வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். தற்போது அதே போன்று பி.பி.ஜி சங்கரும் கொலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
பிபிஜி குமரன் இறந்த பின்பு பிபிஜி சங்கர் என்பவர், கொலை, கட்டப்பஞ்சாயத்து, அங்குள்ள தொழிற்சாலை கழிவுகள் எடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இதனால் பிபிஜி சங்கரின் கூட்டாளிகளே இவருக்கு எதிராக இருந்து வந்தனர். இதனால் பி.பி.ஜி சங்கருக்கு எதிரிகள் அதிகரித்து வந்தனர். அதேபோல் பிபிஜி சங்கர் போன்ற A+ ரவுடியை கொலை செய்தால் அதன் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் ரவுடி என்ற பட்டத்தைப் பெற்று, அதன் மூலம் கட்டப் பஞ்சாயத்து, தொழிற்சாலைகளில் ஸ்க்ராப் எனப் பணம் பார்க்கலாம் என்று ஒரு கூட்டம் இருந்து வந்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிபிஜி சங்கர் வீட்டின் அருகே பிபிஜி சங்கரை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ஒரு கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ரவுடிகள் கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு வீசி பயிற்சி எடுத்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சங்கர் எச்சரிக்கையாக இருந்து வந்தார். இதனால் எப்போதும் உடன் அடியாட்களுடன் செல்வது வழக்கம். ஆனால், நேற்று அவரது வழக்கமான காரில் செல்லாமல் வேறொரு காரில் தனியாக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொலையாளிகள் சங்கரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.