சென்னைபெரியார் திடலில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பாக, அனைத்துக்கட்சி கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கி.வீரமணி, "உயர் சாதியர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது. இதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு செய்ய வேண்டும். 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசால் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொருளாதாரத்தை வைத்து இட ஒதுக்கீடு வழங்குவது என்பது மனுஸ்மிருதியில் இடம்பெற்றுள்ள கொள்கையாகும். இதை பாஜக அமல்படுத்த நினைக்கிறது. இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் 77 சாதிகள் இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை பாஜக ஏற்படுத்துகிறது.
நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு கொடுத்தாலும் மக்கள் வழியாகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக, முதலில் தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பித்து தென் மாநிலங்களிலும் அதற்கு அடுத்தபடியாக அகில இந்தியா முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும்.