சென்னை:சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று (ஏப்ரல் 9) தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றபின், சொந்த காரணங்கள் காரணமாக பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்தன், கூட்டத்திலிருந்து வெளியேறி புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "என் முன்னோர்களுக்கு கோடி நமஸ்காரம், தில்லை அம்பலத்தான் கடவுளை வணங்கி தான் ஆரம்பிப்பேன். அந்த கடவுள் தான் வாக்காளர் மனதில் உள்ளே நுழைந்து எனக்கு வாக்களித்துள்ளார்.
மாமன்றம் கூட்டத்தில் அனைவரும் மரியாதையுடன் தான் நடந்து கொண்டார்கள். மத்திய அரசில் இருந்து சென்னை மாநகராட்சிக்கு நிர்பயா நிதி உதவி மற்றும் சுவச் பாரத் போன்ற மத்திய அரசு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. இதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். பல நல்ல திட்டங்கள் தாளில் மட்டுமே உள்ளது. அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
எனக்கு இந்தி தெரியும்..ஆனால் பிரச்னை வேண்டாம்:ஆனால், ஒவ்வொரு வார்டு உறுப்பினரும் அவர்கள் வார்டில் என்ன திட்டங்கள் செய்தார்கள், எவ்வளவு காலத்தில் செய்தார்கள், முன்கூட்டியே முடித்தால் அவர்களுக்குப் பாராட்டுகள் தெரிவிப்பது போல ஏதாவது சான்றிதழ் வழங்க வேண்டும். சிங்காரச் சென்னையாக மாற்றுவதைவிட பாதுகாப்பான (Safe) சென்னை ஆக இருக்க வேண்டும். வார்டு உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் கண்டிப்பாக வழங்க வேண்டும். இந்த வார்டு உறுப்பினர் ஊதியத்தை மத்திய, மாநில அரசுகள் பிரித்து வழங்க வேண்டும்.