சென்னை:அண்ணாசாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், அண்ணாசாலை காவல்நிலைய போலீசார் தாராப்பூர் டவர் அருகே உள்ள பிரபல ஹோட்டல் மற்றும் கடைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
அப்போது, அண்ணா சாலையில் அமைந்துள்ள தலப்பாகட்டி ஹோட்டல் அருகே உள்ள சாய் என்ற பான் கடையில் போலீசார் திடீர் சோதனை செய்த போது, கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் பான் உருண்டை என சொல்லக்கூடிய கஞ்சா உருண்டைகள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடையின் அருகே உள்ள குடோனில் சோதனை செய்தபோது சுமார் 38 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதில் நாலு கிலோ கஞ்சா உருண்டைகள் என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து பான் கடை என்ற பெயரில் கஞ்சாவை விற்பனை செய்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கசரத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது, பீகார் மாநிலத்திலிருந்து ரயில்கள் மற்றும் பிறவழி போக்குவரத்து மூலமாக இந்த கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் கஞ்சா உருண்டைகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.