சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,
"தீபாவளிக்கு முன்பே ஆன்-லைன் டிக்கெட் விற்பனை முறையை நடைமுறைப்படுத்துவது மிகவும் கடினம். தீபாவளிக்கு வெளியாகும் 'பிகில்' உள்ளிட்ட படங்களின் சிறப்புக் காட்சிக்கு, அரசு அனுமதிக்காத நிலையில், சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் 4 மணி, 8 மணி என சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து பொதுமக்கள், நடிகர்களின் ரசிகர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், அதிக கட்டணம் பெறுவதை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு ஆன்-லைனில் டிக்கெட் விற்பனை செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
அரசு அறிக்கை வெளியிட்டதும் திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகிஸ்தர்கள் சந்திப்பதாக கூறியுள்ளனர். சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கினாலும் எத்தனை மணிக்கு வெளியிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வாங்க மாட்டோம் என்ற நிபந்தனையுடன் தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிப்போம்.
அரசு அனுமதிக்காத நிலையில் சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் விற்பனை செய்திருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அதை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறப்புக் காட்சி குறித்து விவாதிக்கப்படும் திரைப்பட வினியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த சந்திப்புக்கு பின் நல்ல முடிவு வரும். அரசு விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் தான் சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளியன்று வெளியாகும் படங்களுக்கு சிறப்பு காட்சி கிடையாது - கடம்பூர் ராஜு