சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று (நவ.19) விளையாடி வருகின்றன. இந்த உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொது இடங்களில் ஒளிபரப்பு செய்யவும், ஏற்கனவே பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்திய ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் இந்த இறுதிப் போட்டியை, வார இறுதி நாட்களில் சென்னையில் அதிக மக்கள் கூடும் இடங்களில் எல்.இ.டி திரை மூலம் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் காண்பதற்கு ஏதுவாக சில ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
இதில் குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் எல்.இ.டி திரையின் மூலம் பொது மக்கள் காண்பதற்கு ஏதுவாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. பொதுமக்கள் அதிகம் வரும் பட்சத்தில் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.