இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2018இல் தமிழ் ஈழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக இந்த அரசு எங்கள் மீதும் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மீதும் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் அதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அதிமுக அரசே தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இப்படியிருக்கும்போது இந்தப் பிரச்னை சம்பந்தமாக நினைவேந்தல் நடத்தும்போது அவர்களே வழக்குகளைப் பதிவு செய்கின்றனர். அதேபோல் இந்த அரசு தமிழீழ உணர்வாளர்கள், தமிழர் உரிமைக்காகப் பாடுபடுவர்கள் மீதும் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடர்ச்சியாகப் பல்வேறு வழக்குகளைப் பதிவு செய்துவருகின்றது. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
அதுமட்டுமின்றி இங்கிருக்ககூடிய முற்போக்கு அமைப்புகள் நடத்தும் மாநாடு, ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. அதற்காக ஏற்பாடுகளெல்லாம் நடந்துமுடிந்த பிறகு அனுமதி ரத்து செய்வதையே ஒரு வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு மீத்தேன் எதிர்ப்பு மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாட்டை ரத்து செய்துள்ளனர். ஆனால் அவற்றையெல்லாம் மீறி நாங்கள் தமிழரின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்.
அந்தவகையில் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளை முன்னிட்டு சாதி ஒழிப்பு மாநாடு, நீலச்சட்டை பேரணியை பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பாகிய நாங்கள் முன்னெடுக்க உள்ளோம். தமிழர்களின் உரிமைக்காகவும் ஒடுக்கப்பட்டோருக்கான உரிமைக்காவும் தொடர்ச்சியாகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என்பதை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.