சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து மாநிலத்தின் முன்னேற்றத்தை பாஜக தடுக்க முயல்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (பிப்.28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், ‘அரசியல் ரீதியாக என்ன பின்னடைவு ஏற்பட்டாலும் பாஜக, பாமகவுடன் கூட்டணி இல்லை. அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான அணியை திமுக ஒருங்கிணைக்க வேண்டும்’ எனக் கூறினார்.
இதில் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்காது என்ற நிலைப்பாடு, கூட்டணி கணக்குகளில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. 2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகள் தயாராகி வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் தற்போதே அதற்கு தயாராகி வருகின்றனர். குறிப்பாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன.
அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் புதிய தமிழகம் கட்சி ஆகியவை இருக்கின்றன. ஆனால், தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியது. இருப்பினும், தற்போது வரை 2021ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன.
உள் இடஒதுக்கீட்டில் பரமபதம் ஆடும் பாமக: கடந்த அதிமுக ஆட்சியில் 2021 சட்டமன்றத்தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு செய்து சட்டம் இயற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இதில், சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனக் கூறி, 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதனால் அதிமுக கூட்டணியில் இருந்து படிப்படியாக பாமக விலகியது. அதேபோல் கடந்த வருடம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டதே அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியதற்கு சாட்சியாக அமைந்தது. மேலும் சட்டமன்றத்தில் 10.5 சதவீதத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் பட்சத்தில், இடஒதுக்கீடு நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.