சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக கட்சியின் கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2022 ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக் குழுவில், ஒற்றை தலைமையைக் கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மறுத்து தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ் தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஓ.பி.எஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, இந்த வழக்கு இன்று (நவ.07) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இ.பி.எஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “இந்த வழக்கு மூன்றாவது முறையாக விசாரணைக்கு வருகிறது. இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. தன்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகக் கூறி அவகாசம் வாங்கினார்கள். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என வாதிட்டார்.