சென்னை:அரசு கீழ்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதி நவீன தண்டுவட அறுவை சிகிச்சை முதல்முறையாக Balloon Kyphoplasty முறையில் வெற்றிகரமாக நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் செய்து முடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்வி இயக்குனரும், கல்லூரி முதல்வருமான சாந்திமலர் தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறையின் தலைவர் கோட்டீஸ்வரன், ’கும்மிடிபூண்டியைச் சேர்ந்த 40 வயது விவசாய தொழிலாளி கீழே விழுந்து தண்டுவட எலும்பு முறிவு ஏற்பட்டு, வலியால் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தார். அவர் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் தண்டு வடத்தில் ஒரு எலும்பில் உடைப்பு இருந்ததை கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு நரம்பியல் அறுவை துறையில் நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்முறையாக வெளிநாடுகளில் செய்யப்படும் ’Balloon Kyphoplasty’ என்ற முறையில் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டனர். அதனைத் தொடர்ந்து நரம்பியல் அறுவை சிகிச்சைத்துறையின் தலைவர் தலைமையிலான குழுவினர், நோயாளிக்கு அறுவை சிகிச்சையை செய்தனர். அவர் ஒரே நாளில் குணமடைந்து வீட்டிற்குச் சென்று விட்டார்.
தண்டுவடத்திற்கான எலும்பில் பாதிப்பு ஏற்பட்டால் நடப்பது, சிறுநீர் கழித்தல் போன்றவற்றில் பிரச்னை ஏற்படும். மேலும் அறுவை சிகிச்சை செய்தாலும் குறைந்தது 3 மாதம் படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும். ஆனால், ’Balloon Kyphoplasty’ அதி நவீன முறையில் சிகிச்சை முடிந்த மறுநாளே நோயாளி குணமடைந்து வீட்டிற்குச் சென்று விட்டார்.