சென்னை: சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் மற்றும் சுரானா பவர் லிமிடெட் ஆகியவை ஐடிபிஐ, எஸ்பிஐ வங்கிகளிடமிருந்தும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் எஸ்.பி.ஐ. வங்கியிடமிருந்தும் மொத்தமாக 4,000 கோடி ரூபாய் கடனை பெற்று திருப்பி செலுத்தவில்லை என புகாரளிக்கப்பட்டது.
சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி சுரானா நிறுவனத்தின் இயக்குநர்கள், தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா, ராகுல் தினேஷ் சுரானா மற்றும் ஊழியர்கள் பி.ஆனந்த் மற்றும் ஐ.பிரபாகரன் ஆகியோர் மீது, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தீவிர மோசடி புலன் விசாரணை அமைப்பும் வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் ஜாமீன் கோரி சுரானா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான விஜயராஜ் சுரானா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 15 நிறுவனங்களில் 13 நிறுவனங்களுடன் தனக்கு தொடர்பில்லை என வாதிட்டார்.