கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியைகள் ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி இளந்திரையன் பிறப்பித்த உத்தரவில், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய துரதிஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவியை நன்கு படிக்க வேண்டும் என்று கூறியதற்காக, ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது.
மாணவியின் தற்கொலை குறிப்பில் இருந்து கூட, ஆசிரியர்கள் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரங்களும் இல்லை. நன்றாக படிக்க வேண்டும் என்று மாணாக்கருக்கு ஆசிரியர்கள் உத்தரவிடுவது என்பது ஆசிரியப் பணியின் ஒரு அங்கம். அதனால் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மனுதாரர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொருந்தாது எனத் தெரிவித்துள்ளார்.
படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.