சென்னை: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் திருவள்ளுவர் தெருவில் வசிப்பவர் சிவா (33) - ரஞ்ஜிதா (28) தம்பதியினர். இவர்களுக்கு ஜீவா (4) என்ற மகன் இருந்தார்.
இவர்களது சொந்த ஊர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இளவரசன் கோட்டை கிராமம் ஆகும். இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக மாடம்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி கட்டட வேலை செய்கின்றனர்.
குழந்தையை காணவில்லை
எந்த பகுதியில் கட்டட வேலை கிடைக்குதோ, அங்கு சிவாவும் அவரது மனைவியும் ஜீவா என்ற 4 வயது ஆண் குழந்தையை அழைத்துக்கொண்டு வேலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
தற்போது தாம்பரம் சமத்துவ பெரியார் நகர் பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கணவன், மனைவி இருவரும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆக 18), கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும் போது, அருகே 4 வயது குழந்தை ஜீவா விளையாடி கொண்டிருந்தார். வேலை முடிந்த பிறகு ஜீவாவை கூட்டிச்செல்ல தேடியபோது ஜீவாவை காணவில்லை.
இறந்த நிலையில் குழந்தை
பின்னர் அக்கம் பக்கத்திலும் தேடியுள்ளனர். இருந்த போதும் குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து புதிதாக அங்கு கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை இறந்தது தெரியவந்தது.
உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், சிறுவன் முன்னதாகவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த பெருங்களத்தூர் பீர்க்கன்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
தகவலின் அடிப்படையில், மருத்துவமனைக்கு சென்ற பீர்க்கன்காரனை காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லியில் ஓடும் காரில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்: இரண்டு பேர் கைது!