ஒன்பது நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையின் கடைசி மூன்று நாள்கள் முக்கியமானவை. துர்காஷ்டமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
சரஸ்வதி பூஜை - முப்பெரும் தேவியரான லட்சுமி, துர்கா, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வணங்குவதற்கான சிறப்பு பூஜையாகும். சரஸ்வதி பூஜையை கொலு வைத்திருப்பவர்களும் கொலு வைக்காதவர்களும் கொண்டாடலாம்.
இப்பண்டிகையை வீட்டில் இருந்தும் தொழில் நடத்தும் இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் ஆயுதங்களுக்கு பூஜை செய்வது ஆயுத பூஜை என்றும் - வீட்டில் படிக்கும் புத்தகம், பயன்படுத்தும் பொருள்கள் அனைத்திற்கும் பூஜை செய்வது சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது.
ஐதீகம்
ஆயுத பூஜைக்கு மறுநாள் விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் அன்றைய நாள் தொடங்கினால் அந்த ஆண்டு முழுவதும் அவர்களின் தொழில் சிறப்புடன் நடந்து செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை. அவ்வாறு தொழில்செய்யும் இடங்களில் உள்ள பொருள்களுக்கு அன்றைய நாள் பூஜை செய்ய வேண்டும்.
அதிலும் குறிப்பாக ஆயுத பூஜை என்ப்படும் சரஸ்வதி பூஜையின்போது அவருக்குரிய மந்திரத்தை உச்சரிக்கும்போது அன்னையின் நல்லருளைப் பெற்றிடலாம். எந்த பூஜைக்கு முன் முழுமுதல் கடவுளான விநாயகரை வழிபட்டுத் தொடங்க வேண்டும்.