சென்னை:நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது. இந்த கடன் தொகையை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு, 3 கோடி ரூபாயை திருப்பி செலுத்தியது.
மீதி தொகையை அயலான் அல்லது வேறு எந்த படமாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன் திருப்பி தருவதாக 2021ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்நிலையில், ஆண்டுக்கு 13 சதவீத வட்டியுடன் சேர்த்து 14 கோடியே 70 லட்சம் ரூபாயை திருப்பித்தராமல் அயலான் படத்தை வெளியிட கூடாது என தடை கேட்டு, டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று(ஜன.11) இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்புக்கும் இடையே சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர், படத்தை வெளியிட ஆட்சேபனை இல்லை என வழக்கு தொடர்ந்த டி. எஸ்.ஆர் நிறுவனம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி நீதிபதி சரவணன் உத்தரவிட்டார்.
அதேபோல், இதே தயாரிப்பு நிறுவனம் தங்களுக்கு வழங்க வேண்டிய 1 கோடி ரூபாயை செலுத்தாமல் படம் வெளியாக தடை கேட்டு எம். எஸ் சேலஞ்ச் என்ற விளம்பர நிறுவனம் தொடர்ந்த மற்றொரு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாவிட்டால் படத்திற்கு தடை விதிக்க நேரிடும் என நீதிபதி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து உடனடியாக எம் எஸ் சேலஞ்ச் நிறுவனத்திற்கு பட தயாரிப்பு நிறுவனம் 50 லட்சம் ரூபாய் திரும்ப செலுத்தியது. மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் ஏப்ரல் பத்தாம் தேதிக்குள் செலுத்துவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாளை படம் வெளியாக அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:இதுவரை இல்லாத ஆக்ஷனை செய்துள்ளேன் - மிஷன் குறித்து நடிகர் அருண் விஜய் பெருமிதம்!