சென்னை:மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான தொடர்பு மையத்தை அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, எழும்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும், பிங்க் அக்டோபரை பிரதிபலிக்கும் வகையில் சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பரிசோதணை செய்ய வேண்டுகோள்
இந்நிகழ்ச்சியில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி, "புற்று நோயாளிகளில் 27.7 விழுக்காடு நபர்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 16 ஆயிரம் நபர்களுக்கு மேல் சென்னை மாநகராட்சியில் மார்பகப் புற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் பெண்கள் மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும்" என்றார்.
சிறப்பாக செயல்படும் மாநகராட்சி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி பிங்க் அக்டோபர் மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. நானும் பல்வேறு இடங்களில் இந்நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டேன். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அடையாளங்களுள் ரிப்பன் மாளிகையும் ஒன்று. இன்று அது பிங்க் நிறத்தில் ஒளிர்கிறது.
2020இல் உலகத்தில் 10 மில்லியன் நபர்கள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். மார்பகப் புற்றுநோய் பொறுத்தவரை இந்தியாவில் ஒவ்வொரு நான்கு நிமிடத்துக்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்படுகிறது. இந்தியாவில் உள்ள மாநகராட்சிகளில் சென்னை மாநகராட்சி அதிநவீனக் கருவிகள் மூலம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் சிகிச்சைகளை சிறப்பாக செய்து வருகிறது" எனக் கூறினார்.
இதையும் படிங்க : டீசல் விலை உயர்வைக் கண்டித்து விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம்