தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 10:56 PM IST

ETV Bharat / state

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருதுகள்: குடியரசு தினத்தன்று தமிழக ஆளுநர் வழங்குகிறார்!

TN Governor Award: 2023 - ஆளுநர் விருதுகள் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களைத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஆளுநர் விருது – 2023 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களைத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் 04ஆம் தேதி இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த இரு விருதுகளும் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரித்து அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதற்காக ஆளுநர் மாளிகை சார்பில் அறிவிக்கப்பட்டது.

இவ்விருதுகளுக்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டுத் தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், 'சமூக சேவை' மற்றும் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' ஆகிய இரு பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களைத் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பின்வருமாறு அறிவித்துள்ளது.

பிரிவு நிறுவனம் தனிநபர்
சமூக சேவை ஊரக வளர்ச்சி அமைப்பு (Rural Development Organization) (நீலகிரி மாவட்டம்)

ஜி.மதன் மோகன் (திருவண்ணாமலை மாவட்டம்)

எம்.குபேந்திரன் (சென்னை மாவட்டம்)

என்.ரஞ்சித் குமார் (தேனி மாவட்டம்)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பசுமை அமைதி காதலன்' (Green Peace Lover)

(மதுரை மாவட்டம்)

ஜி.தாமோதரன் (தர்மபுரி மாவட்டம்)

சி.முத்துகிருஷ்ணன் (திருநெல்வேலி மாவட்டம்)

வி.தலைமலை (விருதுநகர் மாவட்டம்)

'சமூக சேவை' (நிறுவனம்) பிரிவில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 'ஊரக வளர்ச்சி அமைப்பு' (Rural Development Organization) சமூக சேவைக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆளுநர் மாளிகையின் சார்பில் வழங்கப்படுகிறது.

இந்நிறுவனம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்குக் கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி சேவை செய்து வருவதன் அடிப்படையில் இந்நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

'சமூக சேவை' (தனிநபர்கள்) பிரிவில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.மதன் மோகன், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.குபேந்திரன் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த என்.ரஞ்சித் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆளுநர் மாளிகையின் சார்பில் வழங்கப்படுகிறது.

ஜி.மதன் மோகன் கல்வி, நீர் மேலாண்மை, பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளார். அதேபோல் எம்.குபேந்திரனுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதிலும், தனது ஆட்டோரிக்க்ஷாவை பயன்படுத்தி மரம் நடுதல் மற்றும் அதனை ஊக்குவித்தல் தொடர்பான செய்திகளை வீடுதோறும் கொண்டு சேர்த்தல் மற்றும் அவரது பயணிகளிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் போன்ற முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

என்.ரஞ்சித் குமார் பல துறைகளில் பங்களிப்பை அளித்துள்ளார். அறிவுசார் குறைபாடுகள் உள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பாதுகாக்கப்பட்ட பராமரிப்பு மையங்களில் கொண்டு சேர்ப்பது, இறந்தவர்களைத் தகனம் செய்தல், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்த்தல் போன்ற சேவைகளை கோவிட் - 19 பெருந்தொற்று காலங்களின்போது மேற்கொண்டுள்ளார். போதைக்கு அடிமையாதலைத் தடுத்தல் மற்றும் குழந்தை திருமணத்தைத் தடுத்தல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் தனது பங்களிப்பை நல்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' (நிறுவனம்) பிரிவில் 'பசுமை அமைதி காதலன்' (Green Peace Lover) மதுரையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆளுநர் மாளிகையின் சார்பில் வழங்கப்படுகிறது.

இந்நிறுவனம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய குழுக்களைக் கொண்டு பசுமைச்சூழலை அதிகரிக்கத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் தூய்மை, பசுமை மற்றும் பூர்வீக தாவரங்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' (தனிநபர்) பிரிவில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.தாமோதரன், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சி.முத்துகிருஷ்ணன் மற்றும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.தலைமலை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆளுநர் மாளிகையின் சார்பில் வழங்கப்படுகிறது.

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜி.தாமோதரன் கடந்த 17 ஆண்டுகளாக நீர்நிலைகளை தூய்மைப்படுத்துதல், மரம் வளர்ப்பு மற்றும் இயற்கை விவசாயத் தொழில்நுட்ப பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல் சி.முத்துகிருஷ்ணன் 30 ஆண்டுகளுக்கு மேலாக நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் நாட்டு மரங்கள் நட்டு அவற்றைப் பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.தலைமலை பசுமையை நிலைநிறுத்துவதற்கு நாட்டு மரங்களை நட்டுப் பராமரித்து வருவதுடன் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளைப் பலருக்கு வழங்கி இளைஞர்களிடையே மரம் நடும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

மேலும், இந்த இரு பிரிவுகளுக்கான விருதுகள் வரும் 26ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் குடியிருப்பு தின வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்குகிறார்.

இதையும் படிங்க:இந்து மத விவகாரங்களில் சங்கராச்சாரியார்களே கருத்து கூறலாம்; பாஜக அல்ல - கி.வீரமணி

ABOUT THE AUTHOR

...view details