சென்னை: அம்பத்தூர் எஸ்டேட் ஐசிஎப் காலனி ஓம்சக்தி தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாக்கியராஜ் நேற்று (ஜூலை 12) பீர் பாட்டிலால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.
நண்பருடன் மது அருந்தினார்
இது குறித்து காவலர்கள் தரப்பில் கூறுகையில், நேற்று அயப்பாக்கம் தனியார் மேல்நிலைப் பள்ளி அருகே பாக்கியராஜ், அவரது நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக சென்ற திருமுல்லைவாயில் காவல் நிலைய தலைமை காவலர் சந்தோஷ், பாக்கியராஜிடம் பொது இடத்தில் ஏன் குடிக்கிறீர்கள் எனக் கேட்டு, உடனடியாக கிளம்புமாறு கூறியுள்ளார்.
மேலும் இருவரையும் புகைப்படம் எடுத்துவிட்டு முகவரியைக் காவலர் கேட்ட போது, அவருடன் பாக்கியராஜ் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.
தற்கொலை
அப்போது திடீரென கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் பாக்கியராஜ் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த பாக்கியராஜை காவலர் சந்தோஷும், அவரது நண்பரும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.
காவலர் மீது குற்றச்சாட்டு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பாக்கியராஜின் உடல்கூராய்வு செய்யப்பட்டது. அப்போது, பாக்கியராஜின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாக்கியராஜின் மனைவி அபிராமி, "தனது கணவர் ஆசையாக வாங்கிய ஐபோனை காவலர் சந்தோஷ் பிடுங்கியுள்ளார். அப்போது, செல்போனை தராவிட்டால் பீர் பாட்டிலால் கழுத்து அறுத்துக் கொள்வேன் என மிரட்டியுள்ளார்.
அதற்கு முடிந்தால் அறுத்துக்கொள் என காவலர் கூறியதால் தான் சந்தோஷ் கழுத்தை அறுத்துக் கொண்டார்" எனக் குற்றம்சாட்டினர்.
காவலர் பணியிடை நீக்கம்
பாக்கியராஜ் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ், உதவி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகியோர் காவலர் சந்தோஷிடம் துறை ரீதியான விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காவலர் சந்தோஷ், பாக்கியராஜின் செல்போனை தான் பிடுங்கிதாகவும், அவரைத் தாக்கியதாகவும் ஒப்புக்கொண்டார்.
இதனடிப்படையில் இணை ஆணையர் ராஜேஸ்வரி தலைமை காவலர் சந்தோஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: ஐபோனை பிடுங்கிய போலீஸ்... மனமுடைந்து கழுத்தை அறுத்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை!