சென்னை:பள்ளிக்கல்வித்துறையில் (ஆகஸ்ட் 1ஆம் தேதி) நாளை முதல் ஆசிரியர்கள் தங்களின் வருகையைப் பதிவேட்டில் பதிவு செய்யாமல், கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் ஆப் மூலம் மட்டும் பதிவு செய்தால் பாேதும் என அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களின் கூட்டம் கடந்த 15,16 ஆகியத்தேதிகளில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்குக் கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், 'பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு பேசும்பாேது, மாணவர்கள் இடைநிற்றலால் ஏற்பட்டுள்ள குறைபாட்டினை சரி செய்ய மாணவர்கள் மீது முழுக்கவனம் செலுத்த அறிவுறுத்த வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை கூறியிருந்தார்.
அதில் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் ராமசாமி வெளியிட்ட அறிவிப்பில், (ஆகஸ்ட் 1ஆம் தேதி) நாளை முதல் ஆசிரியர்களும், மாணவர்களும் செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான பதிவேட்டில் வருகைப்பதிவேடு செய்யக்கூடாது. ஆசிரியர்கள் விடுமுறை விண்ணப்பத்தை TNSED செயலியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றம் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் உபரி பணியிடங்கள் இருப்பின், தேவைப்படும் அரசுப்பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
பாேக்சோ கமிட்டியினை பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் அமைத்து, அதன் விவரத்தை அனுப்ப வேண்டும். ஆசிரியர்கள் தொடர் விடுப்பில் இருக்கும்போது, கற்பித்தல், கற்றல் தடைபடாமல் இருக்க மாற்று ஆசிரியரோ அல்லது விடுமுறை முடிந்து வந்த ஆசிரியர் தொடர் சிறப்பு வகுப்புகள் நடத்திட வேண்டும். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், பள்ளிகளில் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அனைவருக்கும் இடைநிலைத்திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்க வேண்டி இருந்தால், பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் இடித்துக்கொள்ளலாம்.
முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளி ஆய்வு பணிகளை முக்கியமாக மேற்கொள்ள வேண்டும். ஒவ்வாெரு பள்ளியிலும் மாணவர்கள் வருகை கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளார். பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களது வருகையை செயலி மூலமாகப்பதிவு செய்வதிலேயே மிகப்பெரிய சிக்கல் ஏற்படும்.
இந்த நிலையில் மாணவர்களின் வருகையை இப்படி பதிவு செய்வதால் மேலும் காலதாமதம் ஆகும். இதனால் மாணவர்களுக்கு கற்பிக்கும் நேரம் குறையும். சில இடங்களில் இன்டர்நெட் தொடர்பு கிடைக்காவிட்டால், வருகையை பதிவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும்.
இதன் மூலம் மாணவர்கள் வருகை குறைந்து பொதுத்தேர்வினை எழுதும்போது மாணவர்கள் விகிதமும் குறையும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்; சிபிசிஐடிக்கு மாற்றம்