உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சங்கர் (26). இவர் கடந்த 7 ஆண்டிற்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளார். பொழிச்சலூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து, சென்னையில் உள்ள பல சலூன் கடைகளில் வேலை பார்த்து வந்த இவர், தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பொழிச்சலூர் பகுதியிலேயே சலூன் கடையை ஆரம்பித்துள்ளார்.
அவரின் கடைக்கு வாடிக்கையாளராக வரும் மணிகண்டன் (26) என்பவர், தான் சொந்தமாக காய்கறி கடை ஆரம்பிக்க வேண்டும் என 20,000 ரூபாயை கடனாகக் கேட்டுள்ளார். அதனை நம்பிய சங்கரும் தனது தங்க மோதிரத்தைக் கழட்டி, இதனை வைத்துக் கடை ஆரம்பித்துக்கொள் என்று கொடுத்துள்ளார்.
இதனிடையே, கரோனா காரணமாக ஊரடங்கு நீடிப்பதால், சலூன் கடையை திறக்காமல் இருந்து வருமானம் இல்லாமல் தவித்த சங்கர், மணிகண்டனிடம் தனது மோதிரத்தைத் திருப்பித்தரும்படி கேட்டுள்ளார்.
ஆனால், மணிகண்டன், மோதிரத்தைத் தரமுடியாது என்றும், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்றும் சங்கரிடம் ஏமாற்றும் தொனியில் மிரட்டலாகப் பேசியுள்ளார்.
இதையடுத்து சங்கர், காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, காவல் துறையினர் மணிகண்டனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரும்படி அழைத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தனது நண்பரான விதுஷனுடன் இணைந்து சங்கரை அடித்து, உதைத்து விட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.