சென்னை:மக்கான்சாவடியை சேர்ந்தவர் சாகுல் அமீது (30). இவர் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிளாட்பார்ம் செருப்பு கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சாகுல் அமீது பணிபுரியும் கடைக்கு வந்த அசோக் நகரைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் அவரது பெண் தோழி சௌமியா ஆகிய இருவரும் காலணி வாங்கி உள்ளனர்.
அப்போது அவர்கள் கிழிந்த பணத்தை கொடுத்ததால், வேறு பணம் தருமாறு சாகுல் அமீது கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நாகராஜ் அருகிலிருந்த தனது நண்பர்கள் சிலரை வரவழைத்து சாகுல் அமீதை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதில் காயமடைந்த சாகுல் அமீது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து சாகுல் அமீது மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட அசோக் நகரைச் சேர்ந்த நாகராஜன் (33), சௌமியா(25), முகேஷ் என்கிற பேஸ் முகேஷ் ( 23), அஜித் குமார் (24), ரஞ்சித் குமார் (22), பிரபாகரன் (27), மற்றும் கேகே.நகரைச் சேர்ந்த ராஜ்குமார் (32) ஆகிய ஏழு பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ஒரு கத்தி மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேநேரம் விசாரணையில் கைது செய்யப்பட்ட முகேஷ் (எ) பேஸ் முகேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகிய இருவர் மீதும் ஏற்கனவே வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது.
பின்னர் கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:இரண்டரை வயது குழந்தைக்குப் பாலியல் தொல்லை - இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை