சென்னை: ARIIA Rankings 2021 IIT Madras Bags No 1: மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே காணப்படும் கண்டுபிடிப்பு திறன், ஸ்டார்ட் அப் மற்றும் தொழில் முனைவோரை உருவாக்கும் திறன் போன்ற குறியீடுகளின் அடிப்படையில், இந்தியாவிலுள்ள உயர் கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்காக, புதுமை கண்டுபிடிப்பில் சாதனைப் படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசையை ஒன்றிய கல்வித்துறை மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் மதிப்பிட்டு வழங்கி வருகிறது.
காப்புரிமை பதிவு மற்றும் அனுமதி, பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை, புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்களின் நிதி திரட்டும் திறன், புதுமைக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான சிறப்புக் கட்டமைப்பு வசதி போன்ற அம்சங்கள், இந்த தரவரிசையின் அடிப்படையாக நிர்ணயிக்கப்பட்டது.
சென்னை ஐஐடி முதலிடம்
புதிய கண்டுபிடிப்புகளுக்கான அடல் தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் இன்று (டிச.29) வெளியிட்டார். இந்தியாவில் இருந்து உயர்கல்வி நிறுவனங்கள் 1438 கலந்துக் கொண்டன. அதில் ஒன்றிய அரசின் தொழில்கல்வி நிறுவனங்களின் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி கூறும்போது, "புதுமை கண்டுபிடிப்புக்காக அடல் தரவரிசை ஆண்டுதோறும் மதிப்பிடப்பட்டு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை ஐஐடியில் புதுமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதன் விளைவாக தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட் அப்பில் புதுமை கண்டுபிடிப்புகள் அதிகளவு கண்டுபிடிக்கப்படுகிறது. ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளும் செய்யப்படுகிறது" எனத் தெரிவித்தார்.