தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் கொடுங்க' - ஈபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி

வடகிழக்குப்பருவ மழையால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

By

Published : Nov 13, 2022, 6:25 PM IST

சென்னை :எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இக்கனமழையின் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீர்காழி மற்றும் பூம்புகார் தொகுதிகளில் வரலாறு காணாத கன மழை பெய்ததன் காரணமாக பல இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தனித் தனி தீவுகளாக காட்சியளிக்கின்றன.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மட்டும் சுமார் 6,000 ஏக்கர் நிலங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இக்கனமழையில் மாநிலம் முழுவதும் நெல்லுடன், வாழை, நிலக்கடலை மற்றும் காய்கறிகள் போன்ற பயிர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் அதிகாரிகளை நேரில் அனுப்பி, கணக்கெடுத்து அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நடப்பாண்டின் பயிர் காப்பீட்டிற்கான கடைசி நாள் வரும் 15ஆம் தேதி என்று அரசு அறிவித்துள்ளது. எனவே, பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை இம்மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் சேர்ந்து விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்களது நிலங்களை காப்பீட்டு திட்டத்தின்கீழ் கொண்டுவர, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும், இந்தாண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் கட்ட வேண்டிய காப்பீட்டுத் தொகையை மாநில அரசே ஏற்று பிரீமியம் தொகையை செலுத்த வேண்டும் என்றும், கனமழையால் பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்'' என்று வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மழை: இன்று சென்னையில் ஆய்வுசெய்த CM; நாளை டெல்டா பகுதிகளுக்கு விஜயம்

ABOUT THE AUTHOR

...view details