சென்னை:சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனாவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது” எனப் பேசியதையடுத்து அரசியல் ரீதியாகப் பல சர்ச்சைகள் எழுந்தது.
இந்நிலையில், சனாதனம் ஒழிப்பு குறித்துப் பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு மற்றும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார்கள் என விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி, இவர்களுக்கு எதிராக இந்து முன்னணி நிர்வாகிகள் கோ-வாரண்டோ (Quo Warranto) வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று (நவ.10) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்.பி. ராசா தரப்பில் மூத்த வழக்கறிஞர் விடுதலை, ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது அவர், “வரையறுக்கப்படாத காரணங்களைக் கூறி ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கோ-வாரண்டோ உத்தரவு பிறப்பிக்கக் கோருவது அரசியல் சாசனத்தைத் திருத்தி எழுதவும், அரசியல் சாசனத்தின் அடிப்படை தன்மைக்கு எதிரானதாகவும் அமையும். ஆகவே, இந்த மனு ஏற்கத்தக்கதல்ல” என்றார்.