சென்னை:பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரை வரும் ஏப்ரல் 28ஆம் தேதியுடன் பணியில் இருந்து செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் நீட், ஜெஇஇ போன்ற போட்டித் தேர்வு பயிற்சிகளும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணிக்காலம் என்பது கல்வியாண்டான ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் மே மாதம் 31ஆம் தேதி வரையில் கடைபிடிக்கப்படும். ஒரு கல்வியாண்டின் இடையிலும் ஒரு ஆசிரியர் ஓய்வுபெற்றாலும், அவருக்கு மறு நியமனம் வழங்கப்பட்டு, அந்தக் கல்வியாண்டில் இறுதியாக மே 31ஆம் தேதி பணியில் இருந்து விடுவிக்கப்படுவர். இதற்குக் காரணம், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த முறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 60ஆக இருக்கிறது. இந்த ஆண்டு, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என ஒட்டுமொத்தமாக 2000 பேர் இம்மாத இறுதியுடன் ஓய்வுபெற உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை சுட்டிக்காட்டி, இம்மாதம் 28ஆம் தேதியுடன் ஆசிரியர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறையில் இருந்து, ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால், ஓய்வுபெற்றும் பணியாற்றி வந்த ஆசிரியர்களை முன்கூட்டியே பணியில் இருந்து செல்லும் படி, கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருவது ஆசிரியர்கள் இடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டப் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் (NEET), ஜெஇஇ (JEE) பயிற்சி வகுப்புகள் தினமும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், கடைசி நேர பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. அதே நேரத்தில், மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி வகுப்புகள் பாதிக்காமல் இருக்க, மாற்று ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித்துறை ஆணையர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'பள்ளிக்கல்வித்துறையில் 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின் படி, கல்வியாண்டில் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டின் இறுதிவரை பணி நீடிப்பு வழங்க வேண்டும். அவ்வாறு பணி நீடிப்பு பெற்றுள்ள ஆசிரியர்களை ஏப்ரல் 28ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்க பல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.