சென்னை:அருந்ததி ராய் எழுதிய 'வாக்கிங் வித் காம்ரேட்ஸ்' எனும் புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டது. இதற்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். ஏபிவிபி அமைப்பின் நெருக்கடி காரணமாகவே அந்தப் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது என்று குற்றம்சாட்டப்படுகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தினர் கூட்டம் நடத்தினர்.
அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன கூட்டத்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய கனிமொழி, " குழு அமைத்து ஆய்வு செய்து படிக்கத் தகுதியில்லாத புத்தகம் என முடிவு செய்து வாக்கிங் வித் காம்ரேட்ஸ் புத்தகம் பாடத்திலிருந்து நீக்கப்படவில்லை. ஏபிவிபியின் நெருக்கடியால் இந்தப்புத்தகம் நீக்கப்பட்டிருக்கிறது. இந்த புத்தகத்தை நீக்கவேண்டும் என ஏபிவிபி புகார் அளித்தது தொடர்பாக வலதுசாரி சிந்தனை கருத்துகளை தாங்கி நிற்கும் ஆர்கனைசர்( organiser) எனும் இணையதளத்தில் வெளியான செய்தியை பார்த்துவிட்டு அவசர அவசரமாக துணைவேந்தர் நீக்கியிருக்கிறார்.
'அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியதோடு இது நிற்கப்போவதில்லை'- எச்சரிக்கும் கனிமொழி ஆரோக்கியமான விவாதமே நடத்தக்கூடாது என்ற அடிப்படையில் வலதுசாரிகள் நடந்துகொள்கிறார்கள். சமூகத்தில் மாற்றங்கள் வரவேண்டுமானால், மாறுபட்ட கருத்துகள் விவாதிக்கப்படவேண்டும். தொடர்ச்சியாக பாஜக அரசு நெருக்கடிகளை கொடுத்துவருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு தீவிரவாதி முத்திரை குத்தி கைதுசெய்துள்ளது. தொடர்ச்சியாக அவருக்கு பிணை வழங்கவும் மறுத்துவருகிறது. வனங்களை, சுற்றுச்சூழலை பாதுகாக்க நினைக்கும் மக்களை இந்த அரசு அடித்து துன்புறுத்துகிறது அல்லது வழக்குப்போட்டு நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.
மத்திய அரசு , சுற்றுச்சூழல் சட்டத்தின் மூலம் இயற்கை வளங்களை பெருநிறுவனங்கள் கொள்ளையடிக்க தாரளமாக அனுமதி வழங்கவிருக்கிறது. அதற்கு எதிராக யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் எந்த எந்த வகையில் ஒடுக்கமுடியுமோ அந்த அந்த வகையில் ஒடுக்குகிறது. நமக்கு மூச்சுமுட்டக்கூடிய அளவில் இன்னும் நெருக்கடிகளை மத்திய அரசு தரும். அதற்கு முன்பாக மக்களை நாம் ஒருங்கிணைந்து பாசிச அரசுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். போர்களத்தை நோக்கி நாட்கள் நகரந்துகொண்டிருக்கின்றன. அதற்கேற்ப நாம் புரிந்து நடந்துகொள்வோம்" என்றார்.
முன்னதாக பேசிய முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, "வாக்கிங் வித் காம்ரேட்ஸ் புத்தகம் ஜார்க்கண்ட் பகுதியில் பெருநிறுவனங்கள் எவ்வாறு வளத்தை கொள்ளையடிக்கின்றன. அதற்கு எதிராக இருக்கும் மக்களை அரசு எவ்வாறு கொள்கிறது என்பதை பேசுகிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் பழங்குடியின மக்களை காட்டைவிட்டு விரட்டும் வேலையை அரசு செய்கிறது.
உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரின் புத்தகத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. அதுவும், நான் முன்பு துணைவேந்தராக இருந்த பல்கலைக்கழகத்திலேயே இச்செயல் நடந்திருப்பது எனக்கு மிகுந்த வேதனையை அளித்திருக்கிறது. மீண்டும் அப்புத்தகம் பாடத்திட்டத்தில் இணைக்கப்படவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:அருந்ததி ராய் புத்தகம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கம் - கல்வியாளர்கள் கண்டனம்!