கல்லூரிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2 ஆயிரத்து 331 (2,331) உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்தப் பணியிடங்களுக்கு, அக்டோபர் 4ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை, ’www.trb.tn.nic.in’ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், சான்றிதழ் சரிபார்க்கும் தேதி மற்றும் இடம், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் லதா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு இன்று மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இன்று மதியம் 12 மணி வரை 44 ஆயிரத்து 667 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 33 ஆயிரத்து 128 விண்ணப்பதாரர்கள் மட்டும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை சமர்ப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.