சென்னை:அதிக வெப்பநிலை காரணமாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காக்களில் உள்ள வன விலங்குகள் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. இதனால் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், அனைத்து விலங்குகளுக்கும் போதுமான நிழல் மற்றும் போதுமான நீர் வழங்கப்படுகின்றன. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க தேவையான இடங்களில் நிழல் வலை அமைக்கப்பட்டுள்ளது.
காண்டாமிருகம், யானை, நீர்யானை, ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை போன்ற பெரிய தாவர உண்ணி விலங்குகளுக்குத் தண்ணீர் மழை மற்றும் தெளிப்பான்கள் மற்றும் மஞ்சோன் புல் ஓலைக் கொட்டகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வெப்பத்தில் இருந்து குளிர்விக்க, விலங்குகளுக்கு, ஒவ்வொரு நாளும் இரண்டு முறை குளத்தில் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.
வெயில் படாமல் காத்தல்:குரங்கினங்கள், கரடிகள் மற்றும் யானைகளை குளிர்விக்க சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மான்களுக்கும் புதிய ஓலைக் கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பறவை இருப்பிட அடைப்புகளின்மேல் மற்றும் பக்கவாட்டில் கோணிப் பைகள் கட்டப்பட்டு, பகலின் வெப்பமான நேரங்களில் குளிர்ந்த நீர் தெளிக்கப்படுகிறது. இதனால் இருப்பிடங்களில் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது.
நெருப்புக்கோழிகள், நிலப்பறவைகள் வாழுமிடங்கள் மற்றும் நீர்ப்பறவை பறவைக் கூடங்களில் நீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க அயல்நாட்டுப் பறவைகள், நீர் மற்றும் நிலப்பறவைகள் இருப்பிடங்களில் நிழல் வலைகள் அமைக்கப்பட்டுள்ளன.