தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதி மோசடியில் ஈடுபட்ட ஏஆர்டி நகைக்கடை உரிமையாளர்கள் கைது - financial fraud

அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த ஏ.ஆர்.டி நகைக்கடை நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நிதி மோசடியில் ஈடுபட்ட ஏஆர்டி நகைக்கடை உரிமையாளர்கள் கைது
நிதி மோசடியில் ஈடுபட்ட ஏஆர்டி நகைக்கடை உரிமையாளர்கள் கைது

By

Published : Jun 10, 2023, 11:37 AM IST

சென்னை:நொளம்பூர் பாரதி சாலையில் ‘ஏ.ஆர்.டி ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக ஆல்வின் மற்றும் ராபின் ஆகிய இருவரும் இயங்கி வந்தனர். முன்னதாக, தங்க நகை சேமிப்பு, தங்க நகைக் கடன் மற்றும் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் வாரம் 3 ஆயிரம் வீதம் 1 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான திட்டங்களை இந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

இதனை நம்பிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லட்சம் லட்சமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து உள்ளனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து பிரமாண்டமான திரைப்படம் எடுக்கப் போவதாகவும் கூறி பொதுமக்களை நம்ப வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல், முதலீடு பணத்தில் ஏ.ஆர் மால் மற்றும் பல மாவட்டங்களில் நகைக் கடையின் கிளைகள் என தொழிலை பெருக்கி உள்ளனர்.

அதேநேரம், சில நாட்கள் வட்டியை வாரி வழங்கி வந்த இந்த நிறுவனம், பின்னர் வட்டி தராமல் பல ஆயிரம் கோடிகளை சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி உள்ளது. இதனை உணர்ந்து இந்த நிறுவனத்தில் ஏமாந்த பொதுமக்கள் பலரும் நகைக்கடை, ஏ.ஆர் மால் ஆகிய இடங்களில் முற்றுகையிட்டபோது, அவர்களை குண்டர்களை வைத்து தாக்கியதால் வேறு வழியின்றி அனைவரும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து உள்ளனர்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஏ.ஆர்.டி நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆல்வின், ராபர்ட் மற்றும் தொடர்புடைய ஏஜெண்டுகள் ஆகியோர் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நிறுவனத்தின் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் மூலம் ஏ.ஆர் மால் மற்றும் நகைக்கடைக்கு சீல் வைத்து சென்றனர். இந்த வழக்கில் முக்கிய நபர்களான ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோர் தொடர்ச்சியாக தலைமறைவாக இருந்து வந்ததால், அவர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரால் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே, இந்த வழக்கில் ஏஜென்ட் பிரியா என்பவரை மட்டும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய நபர்களான ஏ.ஆர்.டி ஜுவல்லரி குழுமத்தின் உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபின் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் ஏ.ஆர் மால் மற்றும் ஏஆர்டி ஜூவல்லரி கடை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், பொது மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த பணத்தை இவர்கள் எங்கே பதுக்கி வைத்துள்ளனர் எனவும், சொத்துக்களாக ஏதும் குவித்துள்ளனரா அல்லது வெளிநாட்டில் ஏதேனும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா என பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வடமாநிலத்திற்கு சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு.. ஓடும் பேருந்தின் பின் பக்கம் ஏறி துணிகர கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details