தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுபோதையில் காவலரை தாக்கிய அரசு ஊழியர்கள் கைது! - chennai crime today

சாலையில் மது அருந்திய கும்பலை கலைந்து செல்லுமாறு கூறிய காவலரை தாக்கிய அரசு ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் காவலரை தாக்கிய அரசு ஊழியர்கள் கைது!
மதுபோதையில் காவலரை தாக்கிய அரசு ஊழியர்கள் கைது!

By

Published : Feb 23, 2023, 7:43 AM IST

சென்னை:சென்னையை அடுத்த ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பில் ஸ்டாலின் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.22) இரவு காவலர் ஸ்டாலின் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை டாஸ்மாக் கடை அருகே உள்ள தசூதீன்கான் தெருவில், 4 பேர் சாலையோரம் மது அருந்திக் கொண்டிருந்ததை ஸ்டாலின் பார்த்துள்ளார். எனவே சாலையோரம் அது அருந்தியவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது கும்பல், காவலர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது.

தரக் குறைவாக பேசியது மட்டுமின்றி போதைக் கும்பல் காவலரை கடுமையாக தாக்கி உள்ளனர். தாக்குதலில் காவலரின் சீருடையையும் கும்பல் கிழித்ததாக கூறப்படுகிறது. மேலும் ரோந்து வாகனத்தின் சாவியை போதை கும்பல் பறித்துள்ளது. அந்த நேரத்தில் ரோந்து வாகன ஓட்டுநரான மணி என்பவர், சாவியை திருப்பி கேட்டுள்ளார். எனவே அவரையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது.

பின்னர் காவலர் ஸ்டாலின் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், போதையில் காவலர்களை தாக்கிய 4 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மதுபோதையில் காவலர்களை தாக்கியதாக காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டவர்கள், தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை பிரிவில் தட்டச்சராக பணியாற்றி வரும் சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் (36), அரசு பிரிண்டிங் பிரஸ்சில் உதவியாளராக பணியாற்றி வரும் கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தமிழ்செல்வன் (41), அரசு பிலிம் இன்ஸ்டிடியூட்டில் உதவியாளராக பணியாற்றி வரும் கோவிலம்பாக்கததைச் சேர்ந்த விஜய் (33) மற்றும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கொத்தனார் ஜெயபால் (38) என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை: ஆட்சியர் அலுவலகம் அருகே பயங்கரம்!

ABOUT THE AUTHOR

...view details