சென்னை மேற்கு மாம்பலத்தில் செயல்பட்டு வந்த ரூபி ஜுவல்லர்ஸ் என்ற நிறுவனம், தங்க நகைகளுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படும் என அறிவித்ததை நம்பி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தனர்.
கடனை செலுத்தி நகையை மீட்கச் சென்ற போது, நகையை அந்நிறுவனத்தினர் திருப்பி வழங்கவில்லை. இதுசம்பந்தமாக, அடமானம் வைத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப் பிரிவு, ரூபி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் சையது ஹிப்சுர் ரஹ்மான், பியாபானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையில், தன்னை திவால் ஆனவர் என அறிவிக்கக் கோரி சையது ரஹ்மான், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, விசாரணைக்கு ஆஜராகும்படி, பல முறை சையது ரஹ்மானுக்கு உத்தரவிட்டும் ஆஜராகவில்லை எனக் கூறினார்.