சென்னை:அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என, பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, தமிழ்நாட்டில் பொறியியல், கலை அறிவியல் பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத் தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகளை ரத்து செய்வதாக, தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதேபோன்று அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரியர் தேர்வை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதுதொடர்பான மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இறுதி பருவ தேர்வுகளை ஆன் லைன் மூலம் நடத்தும் போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்த முடியாது? எனவும் கேள்வி எழுப்பி, விசாரணையை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இவ்வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ் நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் முடிவுகள் அறிவித்துள்ளதாகக் கூறி, ராம்குமார் ஆதித்தன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக மேலும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அம்மனுவில்,"தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் அரியர் தேர்வு நடத்தாமல் அரியர் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும், ஏற்கனவே வெளியிட்டிருந்தால் அதனை உடனடியாக திரும்பப் பெற்று புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, அரியர் தேர்வை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவது பல குழப்பங்களை ஏற்படுத்தும் என்பதால் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குகள் நவம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வருவதால், இவ்வழக்கையும், அந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்பது பல்கலைக்கழக மானியக்குழுவின் நிலைப்பாடு எனவும், இவ்வழக்கை, அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என, பல்கலைக்கழக மானியக் குழு தரப்பிலும் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், அரியர் தேர்வு ரத்தை எதிர்த்த வழக்குடன் சேர்த்து, இவ்வழக்கை விசாரிப்பதாகக் கூறி, விசாரணையை நாளை மறுநாளுக்கு(நவ.20) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.