நாடு முழுவதும் கரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடைகளானது கடந்த மே 7ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது. இதில் சென்னையில் கரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை தவிர்த்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நாளை (18.08.20) காலை 10 மணி முதல் 7 மணி வரை சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதில் நாள் ஒன்றுக்கு 500 நபர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும். மேலும் நோய் பாதித்த பகுதிகளிலும், வணிக வளாகங்களிலும் உள்ள கடைகள் திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மது வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்து வருவதோடு, தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மதுபானக் கடைகளில் அதிக கூட்டம் கூடாமல் இருப்பதற்காக தற்போது தடுப்பு கம்பங்கள் அமைக்கப்பட்டு, தகுந்த இடைவெளியை பின்பற்ற குறியீடுகள் வரையப்பட்டுள்ளது.