கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் மக்கள் சுய ஊடரங்கை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி இன்று சென்னையில் மருத்துவமனைகள், மருந்துக்கடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து உணவகங்கள், பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்னையின் பிரதான சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.
வெறிச்சோடிய சாலையில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் இதனையடுத்து சென்னையின் பிரதான சாலையான, கோடம்பாக்கத்தில் இருந்து அசோக் பில்லர் செல்லும் அம்பேத்கர் சாலையில் மிகவும் குறைந்த அளவு வாகனங்களே சென்றன. இதனால் அந்தப் பகுதியிலிருந்த சிறுவர்கள், இளைஞர்கள் இணைந்து சாலையின் நடுவே கூட்டமாகச் சேர்ந்து கிரிக்கெட், கால்பந்து விளையாடினர்.
நோய்க்கிருமி பாதிப்பைக் குறைக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கையை இன்று பெரும்பாலான மக்கள் பின்பற்றி தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த நிலையில், சிலர் அலட்சியத்துடனும், பொறுப்பில்லாத வகையிலும் செயல்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.