சென்னை: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் சியாமளா. இவர் நேற்று முன்தினம் அறம் பட இயக்குநர் கோபி நயினார் மீது மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மூலமாக இயக்குநர் கோபி நயினாருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் அறிவுறுத்தலின் பேரில் கருப்பர் நகரம் என்ற படத்தை விஜய் அமிர்தராஜ் என்பவருடன் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அது மட்டுமல்லாமல், கருப்பர் நகரம் என்ற படத்திற்காக பல்வேறு தவணைகளில் கடந்த 2018ஆம் ஆண்டு 30 லட்சம் ரூபாய், தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜிடம் கொடுத்ததாக புகாரில் தெரிவித்து உள்ளார். அதன் பின்பு கருப்பர் நகரம் படம் எடுக்காமல், தனக்கு கொடுக்க வேண்டிய 30 லட்சம் ரூபாயை திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக இயக்குநர் கோபி நயினார் மற்றும் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், அறம் பட இயக்குநர் கோபி நயினார், சியாமளாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து கருப்பர் நகரம் திரைப்படத்தில் இணை இயக்குநராக சியாமளா இருந்ததே தனக்கு தெரியாது என கூறி உள்ளார். மேலும், அறம் பட இயக்குநர் கோபி நயினார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 8) புகார் ஒன்றை அளித்து உள்ளார். புகார் அளித்தப் பின் கோபி நயினார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, கருப்பர் நகரம் படத்தின் இயக்குநர் மட்டுமே நான் எனவும், தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் அலுவலகத்தில்தான் சியாமளாவை சந்தித்தேன் என்றும், இலங்கைத் தமிழர் என்பதால் சியாமளாவிடம் பேசியிருக்கிறேன் என்றும், கருப்பர் நகரம் படத்திற்கு முதலீடு செய்வது தொடர்பாக எந்த வித உரையாடலும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், இந்த படம் சில காரணங்களால் திடீரென நின்றது எனவும் தெரிவித்தார்.