சென்னை: ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக ஆணையர் அலுவலகத்தில், ஏசிடிசி நிர்வாக இயக்குநர் ஹேமந்த் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளார்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியை, மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏசிடிசி நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிலையில் முறையான பாதுகாப்பு அம்சங்கள், வாகன நிறுத்துமிடம், இருக்கை வசதிகள் போன்றவை சரிவர ஏற்பாடு செய்யவில்லை என்றும், இதனால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது என்றும் ரசிகர்கள் தெரிவித்தனர்.
மேலும், இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கான்வாயும் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஆய்வு செய்தார். அதன் அடிப்படையில் நிகழ்விடத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியதாவது, "இசை நிகழ்ச்சி ஏற்பாடு கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் இருந்தது.
25 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டன. ஆனால் 40 ஆயிரம் பேர் வரை வந்ததாக தெரிகிறது. சொந்த வாகனங்களில் அதிகப்படியானோர் வந்ததால் வாகனங்களை தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குளறுபடிக்கான காரணம் மற்றும் ஏற்பாடுகள் குறித்தும் விசாரணை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.