தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இசைக்கு ஜிஎஸ்டி; வரிவிதிப்பை எதிர்த்த ஏஆர் ரஹ்மான் மனு தள்ளுபடி

இசை படைப்புகளுக்கு சேவை வரி விதிப்பை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

AR Rahman case against levy of gst on musical works dismissed
இசைக்கு ஜிஎஸ்டி; வரிவிதிப்பை எதிர்த்த ஏஆர் ரகுமான் மனு தள்ளுபடி

By

Published : Feb 3, 2023, 2:39 AM IST

சென்னை: பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்ச ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி, ஆணையர் 2019ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கடந்த 2020ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான் என்றும், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் ஜி.எஸ்.டி. ஆணையர் தாக்கல் செய்த பதில்மனுவில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், கூறப்பட்டிருந்தது. இதேபோல, 1 கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த கூறி ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும் தனியாக மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஜி.எஸ்.டி. ஆணையரின் உத்தரவை எதிர்த்து ஜி.எஸ்.டி. மேல் முறையீட்டு அதிகாரியிடம் நான்கு வாரங்களில் மேல் முறையீடு செய்யலாம் எனவும் உத்தரவிட்டார்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ்.டி இணை ஆணையர் அனுப்பிய நோட்டீஸுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஓய்ந்தது வாரிசு, துணிவு அலை… புதுப்‌பாய்ச்சலுக்கு தயாராகும் தமிழ் சினிமா?

ABOUT THE AUTHOR

...view details