தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம ஊராட்சி தலைவர்களுக்கான உத்தமர் காந்தி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - eligibility of uthamar gandhi award

கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருதுக்கு அனைத்து கிராம ஊராட்சிகளும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று உள்ளாட்சித்துறை தெரிவித்துள்ளது.

கிராம ஊராட்சி தலைவர்களுக்கான ’உத்தமர் காந்தி விருது’க்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கிராம ஊராட்சி தலைவர்களுக்கான ’உத்தமர் காந்தி விருது’க்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By

Published : Dec 30, 2022, 7:29 AM IST

Updated : Dec 30, 2022, 12:47 PM IST

சென்னை:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கிராம ஊராட்சிகளுக்கான உத்தமர் காந்தி விருது 2022-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஊரக உள்ளாட்சித் துறை வெளியிட்ட அறிக்கையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சட்டப்பேரவையில் “கிராம ஊராட்சிகளில் வெளிப்படைத் தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டிடும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது 2022ஆம் ஆண்டு முதல் மீண்டும் வழங்கப்படும்” என அறிவித்தார்.

அதனடிப்படையில், 2022ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயல்புரிந்த 37 கிராம ஊராட்சிகளை மாவட்டத்திற்கு ஒன்று வீதம் தேர்வு செய்து “உத்தமர் காந்தி விருது” வழங்குவதற்காக ரூ.3.80 கோடி நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளைத் தேர்வு செய்யும் முறையானது அரசாணை (நிலை) எண்.114, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ப.ரா 2) துறை, கடந்த அக்டோபர் 11ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இவ்விருதுக்கு அனைத்து கிராம ஊராட்சிகளும் விண்ணப்பம் செய்யலாம். கிராம ஊராட்சிகள் மிக எளிய முறையில், இணையதளத்தின் வழி படிவங்களில் உள்ள பதிவுகளை உள்ளீடு செய்து விருதுக்கான போட்டியில் பங்கேற்கலாம்.

கிராம ஊராட்சிகள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு https://tnrd.tn.gov.in/ இணையதள முகவரியினை பயன்படுத்திட உரிய பயனர் மற்றும் கடவுச் சொற்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித் தலைவர்கள், இது தொடர்பாக கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உரிய பயிற்சியினை வரும் டிசம்பர் 31க்குள் அளித்திடத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பங்கேற்று விருதுக்கு போட்டியிடுகையில் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ள காரணிகளுக்கான தொடர்புடைய பதிவுகளை உள்ளீடு செய்ய அடிப்படை புள்ளி விவரங்களை கிராம ஊராட்சிகள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

இவ்விருதுக்கு போட்டியிடும் கிராம ஊராட்சிகளை மதிப்பெண்கள் மூலம் பட்டியலிடப்பட்டு மாவட்டத்திற்கு 5 சிறந்த கிராம ஊராட்சிகள் வீதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநகரத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களால் முன்மொழியப்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 37 சிறந்த கிராம ஊராட்சிகள் மாநில அளவில் இறுதி செய்யப்படும்.

அரசால் இறுதி செய்யப்பட்ட 37 கிராம ஊராட்சிகளுக்கு முதல்வர் கேடயம், பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும். இவ்விருதுக்கான இணையதள பதிவுகளை ஜனவரி 17, 2023க்குள் செய்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது‌ என‌த் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ்

Last Updated : Dec 30, 2022, 12:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details