சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 1) நடைபெற்றது.
இந்த ஆலோசனையில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
இந்த செயற்குழுக் கூட்டத்தில், அதிமுகவின் தற்காலிக சபாநாயகராக, தமிழ் மகன் ஹுசேன் நியமிக்கப்பட்டார். அதிமுக செயற்குழுவில் 11 தீர்மானங்களும் 2 சிறப்புத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து ஆட்சி பொறுப்புக்கு வந்திருக்கும் திமுகவின் நேர்மையற்ற பரப்புரைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மழை வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்கள் துயர் துடைக்க அதிமுக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்ற விதிகளை மாற்றி சிறப்புத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் போராட்டம்
மேலும், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து திமுக வெளியிடாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.