சென்னை: சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்திற்கு, இன்று (டிச.27) மாலை மின்னஞ்சல் (E-mail) ஒன்று வந்துள்ளது. அதில் சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் சுமார் 30 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், குறிப்பாக பெசன்ட் நகர் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.
பெயர், விலாசம் என எதுவும் குறிப்பிடப்படாமல், சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மெயில் வந்ததால், டிஜிபி அலுவலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இதையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல்துறையினர் மக்கள் அதிகம் கூடும் இடங்களும், மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்ட இடங்களுமான பெசன்ட் நகர் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் மர்ம நபரிடம் இருந்து வந்த வெடிகுண்டு மிரட்டல் உண்மைதானா என்ற கோணத்தில் சென்னை காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பெயர், விலாசம் எதுவும் குறிப்பிடாமல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மெயில் வந்திருப்பதால், இது பெரும்பாலும் புரளியாகத்தான் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனையில், முக்கிய இடமாக கருதப்படும் கடற்கரைகளான பெசன்ட் நகர், திருவான்மியூர், மெரினா ஆகிய பகுதிகளில் கூடுதலாக பெசன்ட் நகர் காவல்துறை, திருவான்மியூர் காவல்துறை, மெரினா கடற்கரை காவல்துறை உள்ளிட்டோர் மோப்பநாய் உதவியுடன் சோதனை ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அனானிமஸ் (anonymous) மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார், எங்கிருந்து எதற்காக அனுப்பப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் குறித்து தீவிர விசாரணையில் களம் இறங்கி உள்ளது, சென்னை காவல்துறை. இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டச் சம்பவம் சென்னை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:காஞ்சிபுரத்தில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டர் விவகாரத்தில் நடந்தது என்ன? - ஐஜி விளக்கம்