தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 புதிய மாவட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கும் நாள், நேரம் அறிவிப்பு! - edappadi palaniswami latest news

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கும் நாள், நேரம் ஆகியவை குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

Announcement of the day and time when the Chief Minister will start new districts

By

Published : Nov 19, 2019, 12:21 PM IST

அரசின் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டது. இதனடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டத்தை உருவாக்குவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும்; காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமும் உருவாக்கப்படும் என்றும் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில், சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்கப் போவதாகத் தெரிவித்தார். வேலூரை தலைமையிடமாகக் கொண்டு முதல் மாவட்டமும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு இரண்டாவது மாவட்டமும் ராணிப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு மூன்றாவது மாவட்டமும் உருவாக்கப்படும் என்றார்.

இதையடுத்து, புதிய மாவட்டங்களின் எல்லையை வரையறை செய்ய தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் எந்தெந்த வருவாய் கோட்டங்கள், வட்ட அலுவலகங்கள் ஆகியவைகளை புதிய மாவட்டங்களில் சேர்ப்பது என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வந்தன.

இதன் பின்னர் இது குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனடிப்படையில் புதிய மாவட்டங்களில் எந்தெந்த வட்டம் இடம்பெற்றுள்ளது என்ற விவரத்தை அரசாணையாக கடந்த 13ஆம் தேதி அரசு வெளியிட்டது.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான நாள், நேரம் ஆகியவை தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளன.

அதன்படி வருகிற 22ஆம் தேதி காலை 9:15 மணிக்கு தென்காசி மாவட்டத்தையும், வரும் 27ஆம் தேதி காலை 10:45 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

அதற்கடுத்த நாளான 28ஆம் தேதி காலை 10:30 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தையும், அதே நாளில் 12:30 மணிக்கு திருப்பத்தூர் மாவட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தை 29ஆம் தேதி நண்பகல் 12:15 மணிக்கு முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

இதையும் படிங்க: புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் - தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details