வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிவர் புயல், நேற்று (நவ.24) புயலாக மாறியது.
தற்போது இப்புயல் சென்னையின் தென் கிழக்கே 430 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், நிவர் புயல் இன்னும் தீவிரமடையுமே தவிர பலவீனமடைய வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாநில அரசு சார்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் சார்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், புயல் பாதிக்கும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையங்கள், மாநில சுகாதார துறை செயலாலர், சென்னை பெருநகர மாநகராட்சி ஆகிய அமைப்புகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.
அதில், புயல் பாதிக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்படும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மீட்க வேண்டும், ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் பிரச்னைக்கு ஏற்ப தேவையான உதவிகளை செய்ய வேண்டும், நிவாரண முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும்.
பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மருந்துகள், சிறப்பு வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் நிவர் புயல் அவசர கால உதவிக்கு 18004250111 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு 9700799993 என்ற வாட்ஸ் ஆப் வீடியோ அழைப்பு எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நிவர் புயல்: ரிப்பன் மாளிகையில் 24 X7 இயங்கும் கட்டுப்பாட்டு அறை - எஸ்.பி.வேலுமணி