தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜா முத்தையா மருத்துவத் தேர்வுகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நடத்தக் கூடாது!

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல்மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது எழுத உள்ள தேர்வுகளை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்திடக் கூடாது எனவும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்தான் நடத்திட வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

raja muthiah medical college
ராஜா முத்தையா மருத்துவத் தேர்வுகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நடத்தக் கூடாது!

By

Published : Feb 21, 2021, 4:42 PM IST

சென்னை:இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது, "அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, இதர தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக குறைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. இப்பிரச்னையில் அக்கறையோடு செயல்பட்ட முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நன்றி.

ஏற்கனவே கட்டணம் செலுத்தாதவர்களிடம் கட்டணம் செலுத்துமாறு கட்டாயப் படுத்தக் கூடாது. அனைத்து கட்டண பாக்கிகளையும் ரத்து செய்ய வேண்டும். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் புதிதாக சேரச் சென்ற மாணவர்களிடம் பழைய கட்டணத்தை கட்டும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிகக் கட்டணம் என்பதால் மாணவர்கள் கல்லூரியில் சேராமலேயே சென்றுள்ளனர்.

எனவே ,கட்டணக் குறைப்பை முழுமையாகவும்,உடனடியாகவும் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும். ஏற்கனவே கட்டணம் செலுத்தாத மாணவர்களிடம் கட்டணம் மிரட்டி வசூலிக்கப்படுகிறது. உயர்கல்வித்துறை கந்துவட்டிக் காரர்களை விட மோசமாக செயல்படுகிறது. இக்கல்லூரிகளின் கட்டணங்களை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டப் பிறகும் பழைய, மிக அதிக கட்டணங்களை வசூலிப்பது நேர்மையான செயல் அல்ல, நியாயமல்ல. இக்கல்லூரிகளின் நிர்வாகத்தில் ,தமிழ்நாடு உயர்கல்வித்துறை தொடர்ந்து தனது மூக்கை நுழைப்பது சரியல்ல. இது கடும் கண்டனத்திற்குரியது.

இந்தக் கல்வியாண்டு கட்டணமாக இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செலுத்திய கூடுதல் கல்விக் கட்டணங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மாணவர்களிடம் கருணையோடு திருப்பி வழங்கிட வேண்டும். மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இதர கல்லூரிகளின் மாணவர்கள் பெற்றுள்ள அனைத்து கல்விக் கடன்களையும், விவசாயக் கடன்களைப் போல் தள்ளுபடி செய்ய வேண்டும்.

வங்கிகளில் மாணவர்கள் பெற்றுள்ள கல்விக் கடன்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே செலுத்திட வேண்டும். கடன்பட்டு நெஞ்சம் கலங்கும் பெற்றோர்களின் கவலைகளைப் போக்கிட முன்வர வேண்டும். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல்மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தற்பொழுது எழுத உள்ள தேர்வுகளை, அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்திடக் கூடாது, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்தான் நடத்திட வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:'கரோனா தொற்று தடுப்பூசிக்கு தனி வரி போடக்கூடாது' - மருத்துவர் ரவீந்திரநாத்

ABOUT THE AUTHOR

...view details