சென்னை: கோவை கார் விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முறையாக கையாளவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனிடையே தமிழ்நாடு காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளது.
அதில், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார். புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அதுவும் வெடித்து சிதறிய சிலிண்டர் மற்றும் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துகளைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார். இந்த வழக்கை தாமதமாக தேசிய புலனாய்வு முகமைக்கு அனுப்பியதாக கூறுகிறார். இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்குப்பதிவு செய்வதும், விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்திலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இதுதான் சட்டம்.
விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு (ஊபா) சேர்க்கப்பட்டலோ அல்லது தேசிய புலனாய்வு முகமை சட்டம், 2008ல் குறிப்பிடப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டாலோ, தேசிய புலனாய்வு முகமை சட்டப்பிரிவு 6ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய அலுவலர், மாநில அரசாங்கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.அந்த அறிக்கையைப் பெற்றவுடன் மாநில அரசு, மத்திய அரசிற்கு விரைவில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன் மத்திய அரசு, 15 தினங்களுக்குள் வழக்கின் தன்மைக்கு ஏற்ப தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம்.
ஆனால் நடைமுறையில் மத்திய அரசு, தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்து பெற்று விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை, வழக்குப்பதிவு செய்த காவல் நிலைய புலனாய்வு அலுவலரே மேற்கொள்வார். கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்த சட்ட நடைமுறை எந்த தாமதமுமின்றி முறையாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு மற்றும் மத்திய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன்பிறகு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது.